சுகவீனக்காப்புறுதி (அடிப்படைக்காப்புறுதி)
சுவிசில் வாழும் அனைத்துக்குடியிருப்பாளர்களும் கட்டாயம் சுயாதீனமாக சுகவீனக்காப்புறுதி (அடிப்படைக்காப்புறுதி, Grundversicherung | assurance de base) செய்தல் வேண்டும். சுவிசிற்குள் வாழ்வதற்கு எவர் வந்தாலும் அவர்கள் 3 மாதங்களுக்குள் இதை செய்ய வேண்டும். இக்காலப்பகுதியில் சுகவீனமாயிருப்பின் கடந்தகாலத்திற்கான செலவையும் பெற்றுக்கொள்ளலாம். இவ் அடிப்படைக்காப்புறுதி பல தனியார் சுகவீன காப்புறுதிநிறுவனங்களால் (Krankenkassen | caisses-malasies privées) வழங்கப்படுகிறது. காப்புறுதிநிறுவனத்தெரிவு சுயாதீனமானது. சுவிசில் வசிக்கும் அனைவரும் சுகாதாரக்காப்புறுதியில் இணையவேண்டும். காப்பீடு செய்தவர் மாதாமாதம் கட்டணம் செலுத்தவேண்டும். இம்மாதக்கட்டணம் சுகவீனக்காப்புறுதி நடைமுறைகளின் வித்தியாசத்திற்கேற்ப வித்தியாசப்படுவதால் இத்தொகைகளை ஒப்பிடுவது நல்லது. சுகாதாரக்காப்புறுதி வருடத்தில் ஒருமுறை (நவம்பர்) மட்டும் மாற்றலாம். அடிப்படைக்காப்புறுதியானது சுகவீனத்திற்கு மட்டுமல்லாமல், கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பிற்குமான செலவுகளையும் பொறுப்பெடுக்கும். சேவைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பு: சாதாரணமாக பல்சிகிச்சை மற்றும் கண்ணாடிகளுக்கான செலவுகள் சொந்தமாக செலுத்த வேண்டும்.