ஆரோக்கிய வழிமுறைகள்

சுவிஸில் ஆரோக்கிய வழி முறைகள் நன்றாக விரிவாக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடியிருப்பாளர்களும் நோய் விபத்துக் முழுமையான கட்டாயக் காப்புறுதி செய்துள்ளனர். அதிகளவு வைத்திய சிகிச்சை நிலையங்கள், மருந்துக்கடைகள், வைத்தியசாலைகள் என்பன தரமான பராமரிப்பை வழங்குகின்றன.

காப்புறுதி வழிமுறைகள்

சுவிஸிலுள்ள அனைத்துக் குடியிருப்பாளர்களும் நோய் மற்றும் விபத்துக்குக் காப்புறுதி செய்திருக்கவேண்டும். குடிபெயர்ந்து வந்தவர்களாயின் இந்தக் காப்புறுதிகளை குடிபெயர்ந்து 3 மாதத்திற்குள் தொடங்கவேண்டும். குழந்தைகள் பிறந்தாலும் 3 மாதத்திற்குள் காப்புறுதிகள் தொடங்கவேண்டும். கட்டாயக் காப்புறுதிகளின் சேவைகள் சட்டப்படி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. காப்புறுதி செய்த அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவப் பராமரிப்பு கிடைக்கும்.

முதலீடு செய்தல்

சுவிஸ் மக்களின் ஆரோக்கிய வழி முறைகள் அரசாங்கம் (மத்திய, மாநிலம், கிராமசபை) , வேலை வழங்குபவர் மற்றும் தனி நபர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தனி நபர்கள் மருத்துவக்காப்புறுதியையும் விபத்துக்காப்புறுதியையும் மாதாந்த காப்புறுதியாகக கட்டுகின்றனர். இந்தத்தொகை வருடத்திற்கு வருடம் முடிவுசெய்யப்படுவதோடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். எவர் நோய் வாய்ப்படுகிறாரோ அல்லது விபத்திற்குள்ளாகிறாரோ அவர் அதற்குரிய செலவின் ஒரு பகுதியை (ஆரம்பக்கட்டணம் (Franchise) அல்லது சுய பகுதிக் கட்டணம் (Selbstbehalt | la quote part) தானே கட்டவேண்டும். இது வருடத்திற்கு ஆகக்கூடியளவு எவ்வளவு தொகை என நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

மொழிபெயர்ப்பு

வேற்றுமொழி பேசும் வெளிநாட்டவர்கள் வைத்தியர்கள், மருந்தாளர்கள், தாதிமார்களுடன் பேசிப்புரிந்து கொள்வது இலகுவானதன்று. இதற்காகச் சில வைத்தியசாலைகள் விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட கலாச்சார மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பை ஒழுங்கு செய்கின்றன. நோயாளர்கள் இதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளரை வைத்தியரைச் சந்திக்கும் போதோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ பதிவு செய்யலாம். அதன்போது சொந்தப்பணத்தைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.