மருத்துவப் பராமரிப்பு

யார் நோய் வாய்ப்படுகிறார்களோ அன்றி விபத்தைச் சந்திக்கிறார்களோ முதலில் குடும்ப வைத்தியரிடம் செல்ல வேண்டும். இலேசான சுகவீனம் அல்லது சிறு விபத்தாயின் மருந்தகங்களிலும் உதவி பெறலாம். பாரிய விபத்தானால் மட்டுமே நேரடியாக வைத்தியசாலைக்குப் போக வேண்டும்.

மருந்தகம்

மருந்தகங்கள் மருந்துச் சீட்டுக்குரிய மருந்துகளையும், (வைத்தியரால் எழுதப்பட்ட) வேறு மருந்துகளையும் விற்பனை செய்கின்றன. இலேசாக நோய் வாய்ப்பட்டால் முதலில் ஒரு மருந்தகத்திற்குச் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது. அங்குள்ள பயிற்றுவிக்கப்பட்ட மருந்தாளரிடம் ஆலோசனை பெறலாம். ஒரு அவசரகால மருந்தகம் மருந்தகம் எப்போதும் திறந்திருக்கும். அங்கே அவசரத் தேவை மருந்துகளைப் பெறலாம். பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு எந்த அவசரகால மருந்தகம் திறந்துள்ளதென அறிய முடியும்:

  • Bern: 0900 98 99 00 (0.98 CHF/Min.)
  • Biel: 0842 24 24 24
  • Thun: 0900 36 36 36 (0.88 CHF/Min.)

குடும்ப மருத்துவர் ஃ குழந்தை மருத்துவர்

சுவிஸில் அநேகமானவர்களுக்கு குடும்ப மருத்துவர் (Hausarzt | médecin de famille) உள்ளார். அவருக்கு ஒருவரின் தனிப்பட்ட நோய் விபரங்கள் பற்றித் தெரிந்திருப்பதால் மருத்துவப் பிரச்சனைகள் என்று வரும்போது முதல் தொடர்பு கொள்ளவேண்டிய நபராகக் கருதப்படுவார். சிறுவர்களுக்கு குழந்தை மருத்துவர் இருப்பார். தேவைப்படுமிடத்து நோயாளர்களை இவ் வைத்தியர்கள் விசேட துறைசார் வைத்தியர்களிடமோ அல்லது வைத்தியசாலைக்கோ அனுப்புவார்கள். பாரதூரமான அவசர நிலையின்போதுதான் வைத்தியசாலைக்கு நேரடியாகப் போகலாம். வைத்தியரின் சிகிச்சை நிலையம் திறவாத நேரங்களில் வரும் மற்றைய அவசரங்களுக்கு பேர்ண் மாநில அவசர எண் உள்ளது. 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண் 0900 576 747 (சு.பிராங் 1.98 /நிமி.)

பல் வைத்தியர்

வழமையாக பற்களுக்குரிய சிகிச்சைகளுக்கு சொந்தமாகப் பணம் கட்ட வேண்டும். பற்சிகிச்சைகளை உள்ளடக்கிய மேலதிக காப்புறுதி செய்வதற்கு சந்தரப்பமுண்டு. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை இலவசப் பற்சோதனை செய்வதற்கு வசதி உள்ளது.இதற்குரிய தகவல்களை பாடசாலையில் வழங்குவார்கள்.

வைத்தியசாலை / அவசரசிகிச்சைப்பிரிவு

வைத்தியசாலைக்குப் (Spital | hôpital) போவதாயின் அதிகமாக ஒரு வைத்தியரால் பதிந்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும். விதிவிலக்காக ஏதாவது பெரிய ஆபத்து நடந்து நேரடியாக வைத்தியசாலை அவசரப்பிரிவுக்குப் போகவும் சந்தர்ப்பமுண்டு. உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு அவசர எண் 144 இல் அழைக்கவும். ஆபத்துக் குறைந்த அவசரத்திற்குக் குடும்ப வைத்தியரே பொறுப்பாகும்.

வீட்டில் பராமரிப்பு

நோய் வாய்ப்பட்ட அல்லது பராமரிப்புத் தேவைப்படுபவர்கள் வீட்டில் உதவி தேவைப்படுமிடத்து வைத்தியசாலைக்கு வெளியே நோயாளர் பராமரிப்பு (Spitex | service de soins à domiciles externes) உதவி பெறலாம். துறைசார் நிபுணர்கள் வீட்டிற்குப் போய் நோயாளியைச் சந்தித்து பராமரித்தோ அன்றி வீட்டு வேலைகளில் உதவியோ செய்வார்கள். இந்த வசதி வாய்ப்புகள் நோய் விபத்து முதுமை சிக்கலான கர்ப்பம் அல்லது குழந்தை பெற்ற தாய்மாருக்கும் கிடைக்கும். இந்தச் செலவுத் தொகையில் ஒரு பகுதி அடிப்படைக்காப்புறுதி (Grundversicherung | assurance de base) கொடுக்கும். பேர்ண் ஸ்பிரெக்ஸ் சங்கத்தைத் (Spitexverband | association Spitex) தவிர மேலும் பல தனிப்பட்ட ஸ்பிரெக்ஸ் அமைப்புகளும் உள்ளன.