கர்ப்பம் / பிரசவம்

கர்ப்பிணிப் பெண்கள் வைத்தியச் சோதனைக்குரிய செலவுகளைத் கையால் கட்டத் தேவையில்லை. இதனுடன் பிரசவச்செலவுகளையும் அடிப்படைக்காப்புறுதியே பொறுப் பெடுக்கும். பிரசவத்திற்குப் பின்பும் பெற்றோர் இலவச ஆலோசனைகளைப் பெறலாம்.

கர்ப்பம் பிரசவத்துக்குள்ள சேவைகள்

கர்ப்பம் பிரசவத்துக்குள்ள மருத்துவச் சேவைகளை அடிப்படைக்காப்புறுதியே (Grundversicherung|Assurance de base) பொறுப்பெடுக்கும். அதனுள் பிரசவத்திற்கு முன்புள்ள ஒழுங்கான வைத்தியப் பரிசோதனைகளும் பிரசவமும் அதன் பின்புள்ள தேவையான கவனிப்புகளும் அடங்கும். கர்ப்பிணிப் பெண்கள் முன்கூட்டியே ஒர் வைத்தியர் அல்லது மருத்துவ மாதுவை நாடவேண்டும். பிரசவத்திற்கு தயாராவதற்கான வகுப்புகளை (Geburtsvorbereitungskurs|Cours de préparation à l'accouchement) வைத்தியசாலைகளும் மருத்துவமாதுக்களும் நடத்துகின்றனர். வெளிநாட்டவர்களுக்காக விசேடவகுப்புகள் உண்டு. பிரசவம் வைத்தியசாலையிலோ பிரசவவிடுதியிலோ அல்லது வீட்டிலோ நடக்கலாம்.

பிரசவத்தின் பின்னர்

பிரசவத்தின் பின்பு பெற்றோர் ஆலோசனை பெறுவது சுவிஸில் வழமையான விடயம். அதற்காகவே தாய்-தந்தை ஆலோசனை நிலையம் (Mütter- und Väterberatungsstelle | Centre de puériculture) உள்ளது. இங்கே குழந்தைகளின் வளர்ச்சி உணவு மற்றும் பராமரிப்பு பற்றிய தகவல்களைப் பெறலாம். இச்சேவை இலவசமானது. பின்பு தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான வைத்தியப் பரிசோதனைகள் பற்றிய தகவல்களைக் குடும்ப வைத்தியர் அல்லது மருத்துவமாது அறியத்தருவார்கள். குழந்தை பிறந்து 3 மாதங்களுக்கிடையில் மருத்துவ விபத்துக்காப்புறுதி செய்திருக்க வேண்டியது அவசியம் (அடிப்படைக்காப்புறுதி, விபத்துக்காப்புறுதி). இதை குழந்தை பிறப்பதற்கு முன்பே செய்வது மிகவும் நல்லத.

தடுப்பூசிகள்

குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குச் சில நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளைப் போடுதல் விரும்பத்தக்கது. இத்தடுப்பூசிகள் போடுவது கட்டாயப்படுத்தப்படவில்லை. சாதாரணமாக போட வேண்டிய தடுப்பூசிகளின் செலவை அடிப்படைக்காப்புறுதியே பொறுப்பெடுக்கும். குழந்தை மருத்துவர் அல்லது தாய் - தந்தை ஆலோசனை நிலையம் தடுப்பூசிகள் பற்றிய தகவல்களைத் தரும்.

கருக்கலைத்தல்

சுவிஸில் கருக்கலைப்பு கருத்தரித்து 3 மாதத்துக்குள் அனுமதிக்கப்படும். கருத்தரித்து 12 வது கிழமை முடிந்த பின்பு தாயின் உடல் உள ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு சாத்தியமாகும். அதுவும் ஒரு வைத்தியரால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். எவர் கருக்கலைப்புப் பற்றிச் சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு இலவச ஆலோசனை பெற உரிமையுள்ளது. 16 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் ஒரு விசேட ஆலோசனை நிலையத்தை நாடவேண்டும். இந்த அனைத்து மருத்துவச் சேவைகளின் செலவையும் அடிப்படைக்காப்புறுதியே பொறுப்பெடுக்கும்.